ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற ‘ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்’ கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது, பார்வையாளர்களுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதனால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டு மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான இப்போட்டியில் ‘யங் மேட்ஸ்’ (Young Mates) மற்றும் ‘நோர்வூட் சன்ரைஸ்’ (Norwood Sunrise) ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.
ஆட்டம் ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாகவும், அதேநேரம் பரபரப்பாகவும் நகர்ந்தது.
போட்டி நிறைவடைவதற்கு வெறும் 7 நிமிடங்களே எஞ்சியிருந்த வேளையில், மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு, அது மோதலாக வெடித்தது.
கட்டுப்பாட்டை இழந்த பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.
போட்டி நிறுத்தப்பட்ட அந்தத் தருணத்தில், ‘யங் மேட்ஸ்’ அணி 3 கோல்களையும், ‘நோர்வூட் சன்ரைஸ்’ அணி 1 கோலையும் பெற்று முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மைதானத்தில் வன்முறைச் சூழல் உருவானது குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு அவசர முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டது.
இதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைத்து நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மைதானத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எஞ்சிய 7 நிமிட நேரப் போட்டியை டன்பார் மைதானத்தில் நடத்தாமல், பாதுகாப்பான வேறொரு மாற்று மைதானத்தில் நடத்துமாறு ‘நோர்வூட் சன்ரைஸ்’ அணியினர் போட்டி நடுவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கை மற்றும் போட்டியின் எஞ்சிய பகுதி குறித்தான இறுதித் தீர்மானத்தைப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் மிக விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
















