நாட்டின் மிக முக்கியத் தேவையான எஃகு (Steel) உற்பத்தியைப் பாதுகாக்கவும், தேசிய உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தவும் ‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனத்தைப் பிரிட்டன் அரசாங்கம் உத்தியோகபூர்வமாகத் தனது பொதுத்துறை உடமையாக்கியுள்ளது .
ஸ்கந்தார்ப் (Scunthorpe) பகுதியில் அமைந்துள்ள இந்த எஃகு ஆலையில் நேரடியாகப் பணிபுரியும் சுமார் 2,700 ஊழியர்களின் வேலைவாய்ப்புகளையும், வடக்கு லிங்கன்ஷையர் பிராந்தியத்தில் இதனை நம்பியிருக்கும் பல நூற்றுக்கணக்கான ஏனைய தொழில்துறைகளையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு பிரிட்டனின் எஃகு உற்பத்தியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுடன், திறமையான தொழிலாளர்களின் வேலைகளையும், நாட்டின் மிக முக்கியத் தொழில் திறனையும் உறுதி செய்துள்ளது என
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ( Keir Starmer) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொது நலனைக் கருத்திற்கொண்டு தேவைப்படும் பட்சத்தில் எஃகு நிறுவனங்களைப் பொதுத்துறை உடமையாக்குவதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்கும் புதிய எஃகுச் சட்டமூலத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் நேற்று (15) நிறைவேற்றியிருந்தது.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட மறுதினமே அரசாங்கம் தனது புதிய அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் ஸ்டீல் நிறுவனத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















