பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர், பொலிஸ் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் மற்றைய சந்தேக நபர் தப்பியோடியுள்ளதுடன், சம்பவ இடத்தில் வீழ்ந்து கிடந்த வெற்றுத் தோட்டா உறை ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இன்று (19) அதிகாலை 1.30 மணியளவில் பொரலஸ்கமுவ, ஓ. பி. பெரேரா மாவத்தையில் உள்ள வீடு ஒன்றுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கூர்மையான ஆயுதங்களுடன் வந்த நான்கு பேரடங்கிய கும்பல், வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்ததுடன், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சந்தேக நபர்கள் பிலியந்தலை நோக்கி தப்பியோடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் அந்தப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர்.
இதன்போது, இந்த கும்பலைச் சேர்ந்த இருவர் பொகுந்தர, வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடு ஒன்றை நோக்கி மோட்டார் சைக்கிளில் வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் பொலிஸார் அப்பகுதியில் மறைந்திருந்துள்ளனர்.
அப்போது முன்னோக்கி வந்த மோட்டார் சைக்கிளைத் திருப்பி ஓட முயன்றபோது, பொலிஸார் அதனைச் சுற்றி வளைத்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பின்னால் அமர்ந்திருந்தவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டதில், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். எனினும், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பொரலஸ்கமுவ வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டுக்காயங்களுக்குள்ளான 24 வயதுடைய இளம் பெண் ஒருவரும், விபத்துக்குள்ளான பொலிஸாரும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரும் சிகிச்சைக்காக களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் போதைப்பொருள் தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன், சந்தேக நபர்கள் பிரபல திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கொஸ் மல்லி’ என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது கல்கிஸ்ஸ கோட்ட குற்றத்தடயவியல் அதிகாரிகள் (SOCO) சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து மேலதிக கூட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












