விறுவிறுப்புக்கும் வோல்டேஜ் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தில், இங்கிலாந்து நட்சத்திர வீரர் புகாயோ சாகா அடித்த அதிரடி ‘ஹெட்ரிக்’ (Hat-trick) கோல்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டெக்லான் ரைஸ் முதல் கோலை அடித்து அதிரடி கணக்கைத் தொடங்கினார்.
தொடர்ந்து பிரான்ஸ் எல்லைக்குள் ஊடுருவிய இங்கிலாந்து அணிக்கு, 18-வது நிமிடத்தில் எஸ்ரி கோன்சாவும் , 37 மற்றும் 45+1 ஆகிய நிமிடங்களில் புகாயோ சாகாவும் (Bukayo Saka) அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.
நான்கு கோல்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது பாதியைத் தொடங்கிய பிரான்ஸ் அணி, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்த சாதனையைப் படைத்த பிரான்ஸின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 48 மற்றும் 66 ஆகிய நிமிடங்களில் இரண்டு கோல்களையும், 54-வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலாவும் (Bradley Barcola) கோல் அடித்து இங்கிலாந்துக்கு மரண பயத்தைக் காட்டினர்.
பிரான்ஸ் அணி நெருங்கி வந்த வேளையில், ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி (Penalty) வாய்ப்பு கிடைத்தது.
அதனைச் சரியாகப் பயன்படுத்திய புகாயோ சாகா, பந்தை வலைக்குள் திணித்து தனது 3-வது கோலுடன் ‘ஹெட்ரிக்’ சாதனையை நிறைவு செய்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+6′) பிரான்ஸின் உஸ்மானே டெம்பேலே (Ousmane Dembele) ஒரு கோல் அடித்த போதிலும், அடுத்த இரண்டாவது நிமிடத்தில் (90+8′) இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் (Jude Bellingham) பதிலுக்கு ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 6-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தின் பக்கமாக முடித்து வைத்தார்.
கடந்த 1966-ஆம் ஆண்டு உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்தை வென்றதற்குப் பிறகு, உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் இங்கிலாந்து அணி பெறும் மிகச்சிறந்த தரவரிசை (3-வது இடம்) இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியைக் கால்பந்து ரசிகர்கள் உலகெங்கும் கொண்டாடி வருகின்றனர்.
















