நியூ ஜெர்சியில் ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடந்த 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன், 10 வீரர்களுடன் விளையாடிய ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஆட்டத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய ஃபெரான் டோரஸ் (Ferran Torres ) கூடுதல் நேரத்தில் வெற்றி கோலை அடித்து, ஸ்பெய்ன் அணியின் நாயகனாகத் திகழ்ந்தார்.
ஆட்டத்தின் பெரும்பகுதி நேரம் பல தடுப்பாட்டங்களை வெளிப்படுத்திய ஆர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸை தாண்டி, 106-வது நிமிடத்தில் டோரஸ் அடித்த ஒரு வலிமையான ஷாட் கோலாக மாறியது.
இந்த வெற்றிக் கோலுடன் ஸ்பென் அணி தனது இரண்டாவது ஃபிஃபா உலகக் கிண்ணத்தை (முதலாவது 2010-இல்) கைப்பற்றியதால், லியோனல் மெஸ்ஸியும் அவரது ஆர்ஜென்டினா அணியும் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்; அத்துடன், ‘கோல்டன் பூட்’ (Golden Boot) விருதிக்கான போட்டியில் கைலியன் எம்பாப்பேவை முந்தும் முயற்சியிலும் 39 வயதான மெஸ்ஸி தோல்வியடைந்தார்.
போட்டியின் இரண்டாம் பாதியில் இரண்டு மஞ்சள் அட்டை விதிமீறல்களுக்காக ஆர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இருப்பினும், ஆர்ஜென்டினா அணி விடாமுயற்சியுடன் போராடி, 90 நிமிடங்கள் முழுவதும் ஒரு ஷாட் கூட அடிக்காத போதிலும், ஆட்டத்தை கூடுதல் நேரத்திற்கு எடுத்துச் சென்றது.
ஸ்பெய்ன் அணி பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் அதிகம் வைத்திருந்தும், பல கோல் வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் ஆட்டம் பெனால்டி முறைக்குச் செல்லும் நிலையிலேயே இருந்தது.
ஆனால், 106 ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய டோரஸ் கோல் அடித்தது, அவரது அணியினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்த வெற்றியுடன் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கிண்ணம் ஆகிய இரண்டையும் அடுத்தடுத்த தொடர்களில் வென்ற ஒரே நாடாக ஸ்பெய்ன் தொடர்ந்து திகழ்கிறது.
இச்சாதனையை அவர்கள் இப்போது இரண்டாவது முறையாகப் படைத்துள்ளனர்.
அத்துடன், ஒரு முழுத் தொடரிலும் ஒரே ஒரு முறை மட்டுமே கோல் வாங்கிய உலகக் கிண்ண வெற்றியாளர் அணியாகவும் அவர்கள் உள்ளனர்.
அதேநேரம், 2022-ஆம் ஆண்டு உலகக் கிண்ண வெற்றியைத் தொடர்ந்து 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் கோபா அமெரிக்கா கோப்பைகளைக் கைப்பற்றியிருந்த லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜென்டினா அணி, பங்கேற்ற மூன்று முக்கியத் தொடர்களில் முதல் முறையாக ஒரு பட்டத்தை வெல்லத் தவறிய தருணம் இதுவாகும்.
எட்டு முறை ‘பாலன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வென்ற 39 வயதான மெஸ்ஸி, இப்போட்டியை எட்டு கோல்கள் மற்றும் நான்கு ‘அசிஸ்ட்’களுடன் (கோல் அடிக்க உதவியது) நிறைவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.













