முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நலம் குறித்து அவரது கட்சியினரும் குடும்பத்தினரும் கவலை தெரிவித்து வந்த நிலையில், அவரது நீண்டகாலக் கோரிக்கையை ஏற்கும் விதமாக, அவரைச் சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டது.
இத்தகவலை அவரது கட்சியான ‘பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப்’ (PTI) தெரிவித்தது.
அதன்படி, இம்ரான் கானை அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஷிஃபா இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு மாற்றவும், செப்டம்பர் 16 வரை அங்கேயே இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் நயீம் ஹைதர் பஞ்சுதா ‘எக்ஸ்’ (X) தளத்தில் தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரரிலிருந்து அரசியல்வாதியாக மாறிய 73 வயதான இம்ரான் கான், 2022-ல் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறும் பல வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ளார்.
கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமடைவது குறித்து அவரது மகன்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர்.
சிறையில் இருந்தபோது அவரது வலது கண்ணின் பார்வைத்திறன் கணிசமாகக் குறைந்துவிட்டதாக அவரது சட்டத்தரணிகள் கூறியிருந்தனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் ஆட்சியை இழந்ததிலிருந்து, அரசுப் பரிசுகள் மற்றும் சட்டவிரோதத் திருமணம் தொடர்பான வழக்குகள் உட்படப் பல வழக்குகளை கான் எதிர்கொண்டு வருகிறார்.
சில வழக்குகளில் அளிக்கப்பட்ட தண்டனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன அல்லது இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.
எனினும் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.














