தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்களன்று (24) சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் மூன்று இலவச சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் வழங்கப்படும்.
இத்திட்டம் 2027 வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொங்கல் பண்டிகையிலிருந்து செயல்படுத்தப்படும்.
ஆண்டுக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டைக் கொண்ட இந்த முக்கிய நலத்திட்டம், நேரடிப் பயன் பரிமாற்ற முறை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1.30 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள குடும்பங்களுக்குப் பயனளிக்கவுள்ளது.
இது தொடர்பில் தமிழக சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாத குடும்பங்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள் ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கும் என்று தெரிவித்தார்.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ரசீதுகளின் அடிப்படையில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டதும், அதற்கான செலவுத் தொகை திரும்பப் பெறப்பட்டு, குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்த நிவாரண நடவடிக்கைக்குக் காரணமான பொருளாதாரச் சவால்களைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், வளைகுடாப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்களால் ஏற்பட்ட உலகளாவிய விநியோகத் தடைகள் மற்றும் விலை உயர்வு ஆகியவை கடந்த நான்கு மாதங்களாகக் குடும்பங்கள் மீது கடுமையான நிதிச் சுமையைச் சுமத்தியுள்ளதாகவும், இதனால் பல குடும்பங்கள் மாற்று எரிபொருட்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தவிர சமூகப் பாதுகாப்பையும் பயண வசதியையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளான ஒக்டோபர் 2-ஆம் திகதி முதல், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் வரம்பை கணிசமாக விரிவுபடுத்தும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார்.
விரிவுபடுத்தப்பட்ட போக்குவரத்துத் திட்டத்தின் கீழ், பெருநகர மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், லிமிடெட் ஸ்டாப் (LSS) மற்றும் டீலக்ஸ் வகையிலான அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ளலாம்.
மாவட்டங்களுக்கு இடையிலான பயண வசதியை மேம்படுத்தும் வகையில், இவ்வசதி புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தைச் செயல்படுத்துவதால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரம்புகளோ அல்லது பயணங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளோ இன்றி இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

















