பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) எதிர்வரும் நவம்பர் 26 அன்று தாக்கல் செய்யவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வருமான வரியை (Income Tax) அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பரவலாக எழும் ஊகங்களுக்கு மத்தியில், அவர் இன்று ஒரு முக்கியமான வரி எச்சரிக்கையை வெளியிடவுள்ளார்.
சுமார் 30 பில்லியனுக்கும் மேலான வரிகளை அதிகரிக்க அவர் தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில், நாட்டின் நிதிநிலைமை முன்பு ஒப்புக்கொண்டதை விடவும் மோசமாக இருப்பதாக அவர் இன்று டவுனிங் வீதியில் உரையாற்றும்போது தெரிவிக்கவுள்ளார்.
மோசமான பொருளாதார நிலைமை இருந்தபோதிலும், ரீவ்ஸ் அரசாங்கச் செலவினங்களைக் குறைக்க மறுத்து வருகிறார்.
மாறாக, பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொதுச் சேவைகளைப் பாதுகாக்கவும் அதிக ‘முதலீடு’ தேவை என்று அவர் வாதிடுகிறார். எனினும், தொழிலாளர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான வருமான வரி, VAT அல்லது தேசிய காப்புறுதி ஆகியவற்றை அதிகரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ரீவ்ஸ் மீறலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
குறிப்பாக, அடிப்படை வருமான வரியை உயர்த்தும் யோசனையை அவர் பரிசீலிப்பதாகவும், அத்துடன் வரி விலக்குக்கான வரம்பை நீட்டித்து மேலும் பல மில்லியன் மக்களை அதிக வரி வரம்புக்குள் கொண்டுவர அவர் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதிநிலைமையைச் சீர் செய்ய 26 பில்லியன் வரி அதிகரிப்பு “தவிர்க்க முடியாதது” என்று பொருளாதார நிபுணர்கள் குழு ஒன்று கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், ரீவ்ஸ் தமது இந்த முடிவுகளுக்குப் பொறுப்பாக முந்தைய கன்சர்வேட்டிவ் அரசாங்கம் மற்றும் பிரெக்ஸிட் ஆகியவற்றை மீண்டும் குற்றம் சாட்ட வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், வீட்டு வாடகை விடயம் தொடர்பாகச் சட்டத்தை மீறியதாகச் சமீபத்தில் சர்ச்சை ஒன்றுக்குள்ளான ரீவ்ஸ், தனது கட்சியின் வரி வாக்குறுதிகளை மீறினால் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



















