பிரித்தானியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவிகளிலிருந்து விலக வேண்டும் என்று ஸ்கொட்லாந்து தொழிற் கட்சியின் தலைவர் அனஸ் சர்வார் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இது அந்நாட்டின் ஆளும் கட்சிக்குள் பெரும் பிளவை வெளிப்படுத்தியுள்ளது.டவுனிங் ஸ்ட்ரீட் (பிரதமர் அலுவலகம்) தலைமையில் மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அனஸ் சர்வார், ஸ்கொட்லாந்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘இந்த முடிவை எடுப்பது எனக்கு எளிதானதல்ல, இது மிகுந்த மன வேதனையைத் தருகிறது. இருப்பினும், எனது வாக்காளர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமையே முதன்மையானது’ என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.பிரித்தானியத் தலைமையின் தோல்விகள் ஸ்கொட்லாந்தின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும், தற்போதைய தலைமை வெற்றியை நோக்கிய பயணத்திற்குத் தடையாக இருப்பதாகவும் சர்வார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்டார்மர் ஒரு நல்ல மனிதர் என்பதையும், பொதுச் சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் என்பதையும் ஒப்புக்கொண்ட சர்வார், ஆனால் தற்போதைய சூழலில் தலைமை மாற்றம் தவிர்க்க முடியாதது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உலகையே உலுக்கிய எப்ஸ்டீன் ஆவணங்களில், லேபர் கட்சியைச் சேர்ந்த பீற்றர் மாண்டல்சனின் பெயர் இடம்பெற்றுள்ளமை இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளது. மாண்டல்சனை அமெரிக்காவுக்கான பிரித்தானியத் தூதராக ஸ்டார்மர் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்ஸ்டீனிடம் பிரித்தானிய அரசு தொடர்பான இரகசியத் தகவல்களை மாண்டல்சன் மின்னஞ்சல்கள் ஊடாகப் பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள், ஸ்டார்மர் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.















