உலகளவில் எரிசக்தி நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில் புது டெல்லிக்கு ஒரு பெரிய நிவாரணமாக, இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரானின் வெளிவிகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக நம்பகத் தகுதந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை எதிர்கொண்டாலும், குறைந்தது இரண்டு இந்திய டேங்கர்களான புஷ்பக் மற்றும் பரிமல், மூலோபாய ரீதியாக முக்கியமான நீரிணை வழியாக பாதுகாப்பாக கடந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர் தலைமையில் சவுதி அரேபிய மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற லைபீரிய கொடியுடன் கூடிய டேங்கர் கப்பல், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக கடந்து மும்பை துறைமுகத்தில் நங்கூரமிட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்கியதிலிருந்து கடல் போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ள இந்த நீர்வழிப் பாதையில் பாதுகாப்பாகச் சென்ற முதல் இந்திய கப்பல் இதுவாக மாறியது.
முன்னதாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடற்படைத் தளபதி, ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்க விரும்பும் கப்பல்கள் தெஹ்ரானின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இல்லையெனில், அது ஈரானிய தாக்குதல்களின் இலக்காக மாறக்கூடும் என்றும் எச்சரித்தார்.
இதனிடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் இன்று 12 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த மோதலானது கடல் வழிப் போக்குவரத்தை கடுமையாகக் குறைத்து உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கான கட்டுப்பாடுகளை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களுக்கு சேவை செய்யாத கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்று தெஹ்ரான் கூறியுள்ளது.













