மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக வலுசக்தி விநியோகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதால்இ உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொண்டுள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக எதிர்வரும் மாதங்களில் உலக சந்தையில் ஏற்படக்கூடிய புதிய போக்குகள் குறித்து இங்கு விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
தற்போதைய நெருக்கடி நிலையால் இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும், 2025 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட பொருளாதார வெற்றிகளை நிலைபேறாக முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், தடையற்ற வலுசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும் பொருளாதார சுருக்கத்தை குறைக்கும் வகையில் விலைகளை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இதற்காக நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.













