அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெஹ்ரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த 24 மணி நேரத்திற்குள் உலகின் மிக முக்கியமான கடல்வழி எண்ணெய் போக்குவரத்துத் தடையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் புதன்கிழமை (08) மூடியதாக அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஃபார்ஸ் (Fars ) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைச் சுட்டிக்காட்டி, போர் நிறுத்தத்தை மீறியதற்காக ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.
அதேநேரம், நீரிணையை உடனடியாகத் திறக்குமாறு ஈரானிடம் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதற்கு முன்பு, இரண்டு கப்பல்கள் அவ்வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டன; பின்னர் ஈரான் தனது முடிவை மாற்றிக்கொண்டது.
லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கவில்லை என்று இஸ்ரேல் கூறுகின்றது.
ஆனால், இந்தக் கூற்றை ஈரான் மறுத்துள்ளது.
போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற பிற போராளிக் குழுக்களை இஸ்ரேல் குறிவைப்பது உட்பட, பகைமை நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று தெஹ்ரான் அழைப்பு விடுத்துள்ளது.
லெபனானுக்கு எதிரான கொடூரமான சியோனிச ஆக்கிரமிப்பு காரணமாக ஹார்முஸ் நீரிணையை மூட வேண்டும் என்றும், இந்த போர் நிறுத்தம் அனைவருக்கும் பொருந்த வேண்டும் என்றும் ஈரானின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, இரண்டு வார கால போர் நிறுத்தம் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
அந்த முக்கிய நீர்வழிப்பாதையின் மீது ஈரான் தொடர்ந்து கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை வொஷிங்டன் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்தது.
ஏப்ரல் 11 அன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைக்குள் தெஹ்ரான் தனது முற்றுகையைத் தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி குறிப்பிட்டார்.
எனினும், கப்பல்கள் அந்த நீரிணையைக் கடந்து செல்ல ஈரானின் அனுமதி தேவைப்படும்.
ஈரான் மற்றும் ஓமன்/ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான ஒரு குறுகிய கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி, பாரசீக வளைகுடாவை அரபிக்கடலுடன் இணைக்கிறது.
மேலும், இது உலகின் தினசரி எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்கிறது.












