தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு இடைநிலைப் பாடசாலையில் புதன்கிழமை (15) 14 வயது மாணவன் ஒருவன், தன்னுடன் கல்வி பயிலும் எட்டு மாணவர்கள் உட்பட குறைந்தது ஒன்பது பேரைச் சுட்டுக் கொன்றதாகவும், மேலும் 13 பேரைக் காயப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது, இரண்டு நாட்களில் நாட்டில் நடந்த இரண்டாவது பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாகும்.
கஹ்ரமன்மாராஸ் (Kahramanmaras) மாகாணத்தில் நடந்த தாக்குதலில் எட்டு மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்ட்சி (Mustafa Ciftci) செய்தியாளர் தெரிவித்தார்.
இது எங்கள் மாணவர்களில் ஒருவரால் நடத்தப்பட்ட முற்றிலும் தனிப்பட்ட தாக்குதல், இது ஒரு பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும் அவர் விவரித்தார்.
முன்னதாக, கஹ்ரமன்மாராஸ் ஆளுநர் முகர்ரெம் உன்லுயர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அந்த அமளியில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.
அதேநேரேம், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் தந்தை கைது செய்யப்பட்டதாக என்டிவி ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் துப்பாக்கிச் சட்டங்கள் பொதுவாகக் கடுமையாக உள்ளன; 21 வயதுக்கு மேற்பட்ட மற்றும் உரிமம் பெற்ற நபர்கள் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இருப்பினும், துருக்கியில் துப்பாக்கிகள் பரவலாகப் புழக்கத்தில் உள்ளன, பல பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.















