யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று (10) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, யாழ். வைத்தியசாலை தீ விபத்து விவகாரம் மற்றும் அதற்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள தற்போதைய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
இந்தத் தீ விபத்தின் பின்னணி குறித்து பிரதி சுகாதார அமைச்சர் நாடாளுமன்றில் மேலும் விளக்குகையில்:
“யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தானது மிகவும் அபாயகரமான ஒன்றாகும்.
குறிப்பாக, நாட்டில் உள்ள மருந்துகள் மற்றும் அவற்றின் இருப்புக்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வரும் இதே காலகட்டத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளமையானது, பெரும் வினோதமாகவும் சந்தேகத்திற்குரியதாகவும் பார்க்கப்படுகின்றது.”
இந்த விபத்து நேர்ந்த உடனடியாகவே, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இது குறித்துச் சுகாதார அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்தார் என்பதைப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவரது முறைப்பாடு கிடைக்கப்பெற்ற கணமே, இச்சம்பவத்தின் உண்மைப் பின்னணியைக் கண்டறிவதற்கென உரிய உயர்மட்ட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்குத் தான் பணிப்புரை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தீ விபத்தின் பின்னணியில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது திட்டமிட்ட சதிச் செயல்கள் காணப்படுகின்றனவா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையிலான முழுமையான விசாரணை அறிக்கை மற்றும் அதன் முன்னேற்றங்கள் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி நாடாளுமன்றில் மேலும் உறுதியளித்தார்.














