ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் தயாராகி விடும் என உச்சநீதிமன்றத்தில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
அகமதாபாத் விமானநிலையத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக நடத்தி வரும் விசாரணை குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
அதில் , அகமதாபாத் விமான விபத்தின் காக்பிட் குரல் பதிவுகள் உள்ளிட்ட தகவல்களை வெளிநாட்டு குழுவிற்கோ அல்லது பொதுவெளியில் வெளியிடுவதோ விதிகளை மீறிய செயலாகும் எனவும் வெளிநாட்டு சேவையை வழங்கும் விமானம் விபத்துக்குள்ளானது உள்நாட்டு விசாரணைக்குரிய விஷயமல்ல, இது ஒரு சர்வதேச விசாரணைக்குட்படுத்துவது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சாத்தியக்கூறுகளின்படி, விரிவான விசாரணை நடவடிக்கைகள் தோராயமாக 6 வாரங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் , பகுப்பாய்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, வரைவு இறுதி விசாரணை அறிக்கை தோராயமாக அக்டோபரில் தயாராகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













