தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தமிழ் மொழி வெறும் சொல்லல்ல, அது நமது நாகரிகம், பண்பாடு மற்றும் ஒட்டுமொத்த உயிர் மூச்சு எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையைப் பாதுகாப்பதில் தவெக அரசு எந்தவொரு சமரசமும் செய்யாது எனவும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் இதற்கு ஆதரளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.







