போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (11) நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர், மாநிலத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க மக்கள், குறிப்பாக மாணவர்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உணர்ச்சிப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தார்.
தனிப்பட்ட பொறுப்புணர்வு, குடும்பப் பாதுகாப்பு, புனர்வாழ்வுக்கான ஆதரவு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், அந்த நிகழ்வில் அவர் ஒரு உறுதிமொழியை ஏற்கச் செய்தார்.
இந்த உறுதிமொழி, தனிநபர்களை போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்களை போதைப்பழக்கத்திலிருந்து மீட்கவும், மறுவாழ்வு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும், தமிழ்நாட்டில் சட்டவிரோதப் பொருட்களை ஒழிப்பதில் அரசுக்கு தீவிரமாக உதவவும் கடமைப்படுத்துகிறது.
‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ (Drug-Free Tamil Nadu) இணையதளம் வாயாகப் பெருமளவிலான மக்கள் மின்னணு உறுதிமொழி (e-pledge) ஏற்றதாக ஓர் அதிகாரி தெரிவித்தார்.
மாநில அரசு, மாவட்ட அளவிலான கிளைகளுடன் கூடிய விசேட ‘போதைப்பொருள் தடுப்புப் பணிப்படை’ (ANTF) பிரிவை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை அடையாளம் வெளிப்படுத்தாமல் தெரிவிக்கும் வகையில், ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு செயலி’யையும் (Drug-Free Tamil Nadu App) அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.
பாடசாலை சூழலைப் பாதுகாக்கவும், உள்ளூர் அளவில் சக மாணவர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் இளைஞர் தன்னார்வலர் குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.






