‘அர்னாப்’ (Arnab) புயல் இன்று (28) அதிகாலை ஆந்திரப் பிரதேச கடற்கரையோரத்தில் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது என்றும், அது கரையை கடக்கும் செயல்முறை அடுத்த 2-3 மணி நேரத்திற்குத் தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் (IMD) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தென்னிந்திய மாநிலமான ஆந்திராவின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
மாநிலத்தின் சில இடங்களில், சிக்கிக்கொண்ட மக்களைக் காவல்துறையினர் மீட்டனர்.
மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு இன்று காலை நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த மிகத் தீவிர சூறாவளி புயலானது, மேற்கு-மத்திய வங்கக் கடலில், ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில், வட அகலாங்கு 16.4 டிகிரி மற்றும் கிழக்கு நெட்டாங்கு 82.0 டிகிரி என்ற நிலையில் நிலை கொண்டிருந்தது.
இது நர்சாபூருக்கு கிழக்கே சுமார் 30 கி.மீ தொலைவிலும், யானத்திற்கு தென்-தென்மேற்கே 45 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிற்கு தென்-தென்மேற்கே 70 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு கிழக்கு-வடகிழக்கே 90 கி.மீ தொலைவிலும் அமைந்திருந்தது.
இந்திய வானிலை ஆய்வு நிலையத்தினால் இன்று அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை நிலவர அறிக்கையின்படி, இந்த அமைப்பானது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே யானத்திற்குத் தெற்கே—மிகத் தீவிர சூறாவளி புயலாகக் கடக்கக்கூடும்.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 135 கி.மீ வரை நீடித்தும், அவ்வப்போது மணிக்கு 150 கி.மீ வேகத்திலான பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியின் தாக்கத்தால், அனகாபள்ளி, விசாகப்பட்டினம், காக்கிநாடா மற்றும் கோனசீமா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
விசாகப்பட்டினம், காக்கிநாடா, கோனசீமா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களின் ஆட்சியர்கள், தங்கள் மாவட்டங்களில் பலத்த மழையும் பலமான காற்றும் வீசியதாகத் தெரிவித்துள்ளனர்.

சூறாவளியின் தாக்கத்தால் சில இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன.
இதனிடையே, ஆபத்தான சூழலில் சிக்கியிருப்பவர்கள் அல்லது உதவி தேவைப்படுபவர்கள், 112 என்ற எண்ணிற்கோ அல்லது காக்கிநாடா காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ (Kakinada Police Control Room) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 27 ஆம் திகதி காலை 8:30 மணி முதல் ஒக்டோபர் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையிலான இடைப்பட்ட காலத்தில், அனகாபள்ளி, விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் பல இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள கண்ணுரிபாலெமில் அதிகபட்சமாக 261.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கே.வி.பி.ஆர் (KVBR) பள்ளியில் 259.74 மி.மீ மழையும், விசாகப்பட்டினத்தில் உள்ள 16-வது காவல் பட்டாலியன் (Police Battalion) பகுதியில் 259.06 மி.மீ மழையும் பதிவாகியுள்ளன.
புயலின் தாக்கத்தால் புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் பலத்த மழை தொடரக்கூடும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழல் மற்றும் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் நாயுடு புதன்கிழமை காலை 6:15 மணிக்கு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
புயலின் தீவிரம் குறைந்தவுடன், வேரோடு சாய்ந்த மரங்களை உடனடியாக அகற்றவும், மின்சார விநியோகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















