மேற்கு ஜாவாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்து, 4 பேர் காயமடைந்த நிலையில், அங்கு காணாமல் போன 36 தொழிலாளர்களைத் தேடும் பணியில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (22) ஈடுபட்டனர்.
இதற்கிடையில், தீ விபத்து ஏற்பட்டு ஒரு நாள் கழிந்தும், தொழிற்சாலையின் பல்வேறு இடங்களில் இன்னும் புகைந்து கொண்டிருந்த நெருப்புப் பகுதிகளை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை, ஞாயிற்றுக்கிழமை அன்று 15 பேர் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டறிந்ததாகவும், மேலும் நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனை மற்றும் உள்ளூர் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தத் தொழிற்சாலை ஜகார்த்தாவிற்கு மேற்கே சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள பான்டென் மாகாணத்தின் செராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை.
பான்டென் ஆளுநர் ஆண்ட்ரா சோனி ஊடகங்களிடம் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலைக்குள் சுமார் 60 பேர் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும், இரவு நேரத்தில் அந்தப் பெரிய தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்ததையும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடியதையும், ஞாயிற்றுக்கிழமை காலை மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளிலிருந்து குறைந்தது ஒரு சடலத்தை மீட்டதையும் காட்டின.














