அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து, பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் தொடர் அடையாள வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தையும், டிசம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) நவம்பர் 16ஆம் திகதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில், பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் முன்னதாக அனுப்பப்பட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதுவரை தீர்வுகளை வழங்கவில்லை என அக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்துவதற்கான சந்தர்ப்பமும் இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் வாரங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டங்களால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அக்குழு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்புடைய அதிகாரிகளே இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
















