நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளவேண்டும் என நினைப்பவர்களே பொருளாதார மாற்றச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் நம்பிக்கையான இலக்கைக் கொண்டுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தை மாத்திரம் கருத்தில் கொண்டுள்ளன.
பொருளாதார மாற்ற சட்டமூலத்தின் ஊடாக உற்பத்தித்திறனை அதிகரித்து ஒவ்வொரு பிரஜைக்கும் சம வாய்ப்புள்ள நாடாக இலங்கையை மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும்.
மேலும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைக்கொண்ட நாட்டை உருவாக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சிக்கு இணைந்த வகையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், புத்தாக்கத்துடன் கூடிய ஏற்றுமதி விரிவாக்கப்பட்ட போட்டிச் சந்தையை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த சட்டமூலம் பற்றி அறியாதவர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களால் மாத்திரமே
பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும்.
எமது நாட்டில் இலக்குமயப்பட்ட சட்டக் கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படாமையே, பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தின்படி, ஏற்கனவே உள்ள சட்டத்திற்கு உட்பட்ட இலக்குமயப்பட்ட வேலைத்திட்டத்திற்கு தேவையான மறுசீரமைப்புகள் மற்றும் வேலைத்திட்டங்களை செயல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது.
நாம் அவற்றை தயக்கமின்றி நிறைவேற்றுவோம்” என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.