மியன்மாரில் அரசியல் தலைவர்களை விடுவிக்கவும், நாட்டின் ஜனநாயக ஆட்சியை மீண்டும் தொடங்கவும் பாப்பரசர் பிரான்சிஸ் அந்நாட்டு இராணுவத் தலைவர்களிடம் வலியுறுத்தினார்.
தனது வருடாந்த உரையை இன்று (திங்கட்கிழமை) ஆற்றிபோதே பாப்பரசர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னர், மியன்மாரில் தலைவர் ஆங் சாங் சூகியைச் சிறைபிடித்து, இராணுவம் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி மியன்மாரில் பல்லாயிரக்கணக்கானோர் பல நகரங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 180இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளிடம் ஆற்றிய உரையில், மியன்மாரில் சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயகத்திற்கான வழி, கடந்தவார ஆட்சிக் கவிழ்ப்பால் மிகவும் குறுக்கிடப்பட்டுள்ளதாக பிரான்சிஸ் கூறியுள்ளார்.
மேலும், இது வெவ்வேறு அரசியல் தலைவர்களை சிறையில் அடைக்க வழிவகுத்தது எனவும், நாட்டின் நன்மையை நோக்கமாகக் கொண்ட ஒரு நேர்மையான கலந்துரையாடலை மேற்கொள்ள இவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.