அவுஸ்ரேலியாவில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான, தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றின் மூன்றாம் அலை மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.
2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான, ஆசியா ஏ மண்டலத்திற்கான தகுதி சுற்று ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை குவைத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் பஹ்ரைன், குவைத், மாலைத்தீவு, கட்டார், சவுதி அரேபியா ஆகிய அணிகள் பங்கேற்க இருந்தன.
இந்த நாடுகளில் தற்போது கொவிட்-19 பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தகுதி சுற்றுப் போட்டிகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இதே போல் ஆபிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்று ஏ,பி என்று இரு வகையாக பிரிக்கப்பட்டு தென்னாபிரிக்காவில் அடுத்த மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டிகளும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
7ஆவது ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.