மியன்மாரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரின், துப்பாக்கி சூட்டுக்கு உயிரிழந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து 12 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த தாக்குதல் கொடூரத் தாக்குதல் என விபரித்துள்ளனர்.
அத்துடன், ஐரோப்பிய கூட்டமைப்பும், ஐ.நா. பொதுச்சபையும் மியன்மார் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் கண்டித்தன.
நாட்டின் இரு மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உட்பட 40 இடங்களில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்களில் திடீரென வன்முறை வெடித்தது.
இதன்போது இதுவரை இல்லாத வகையில் மிகவும் ஆக்ரோஷமாகவும் கண்மூடித் தனமாகவும் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.
இதன்போது ஆட்சி கவிழ்ப்பு நடந்த நாளிலிருந்து இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 114பேர் உயிரிழந்தனர்.