பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மூவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, நேற்று (திங்கட்கிழமை) பிற்பகுதியில் ஃபரித்பூர் மாவட்டத்தின் மத்திய நகரமான சால்தாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இந்த போராட்டம், சிறிது நேரத்தின் பின்னர் வன்முறையாக மாறியது.
இதன்போது குறைந்தது மூவர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் நிலையத்தை போராட்டக்காரர்கள் தாக்கிய பிறகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
காயமடைந்த மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு குழு ஒரு பொலிஸ் நிலையத்தில் செங்கற்களை வீசியதோடு அரசு அலுவலகங்களை சூறையாடியது, ஒரு அதிகாரியின் வீட்டையும், அரசாங்க அதிகாரிகளுக்கு சொந்தமான இரண்டு கார்களையும் தீக்கிரையாக்கியது.
பங்களாதேஷில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து ஏழு நாட்கள் தேசிய பொதுமுடக்கத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இப்போது இரண்டாவது முறையாக பங்களாதேஷில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மார்ச்-மே மாத காலகட்டத்தில் 66 நாட்கள் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது.