தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு இன்று அமுலுக்கு வருகிறது.
அதன்படி இரவு நேரங்களில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்காது என்றும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகள், பூங்காக்கள், வனவிலங்கு பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கடும் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு கூடாமல் கலந்துகொள்ளவும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இரவுநேர ஊரடங்கு முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்ய பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.