ஐ.பி.எல். ரி-20 தொடரின் 12ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
மும்பை- வான்கடே மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டு பிளெஸிஸ் 33 ஓட்டங்களையும் ராயுடு 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், சக்கரியா 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோறிஸ் 2 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் மற்றும் டிவெட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 49 ஓட்டங்களையும் ஜெய் தேவ் உனட்கட் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், மொயின் அலி 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தாகூர் மற்றும் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 26 ஓட்டங்களையும் 3 விக்கெட்டுகளையும் சாய்த்த மொயின் அலி தெரிவுசெய்யப்பட்டார்.