யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு இடையிலான இரவு நேர தபால் ரயில் சேவையில் எதிர்வரும் ஏழாம் திகதி முதல் படுக்கை ஆசன சேவை ஆரம்பமாகும் என யாழ்ப்பாண ரயில் நிலைய பிரதான ரயில் அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
குறித்த தபால் ரயிலில் படுக்கை ஆசன வசதி கொண்ட மேலதிக பெட்டி இணைக்கப்பட்டு சேவை இடம்பெறவுள்ளதாகவும் சேவையினை பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ். ரயில் நிலையத்தில் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ரயில் சேவை, கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்படும் ரயில் மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தை அடைந்து மீண்டும் 1.15மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு 1.37 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புறப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நகர் சேர் கடுகதி ரயில் சேவை மாத்திரம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய சேவைகள் வழமைபோல் தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு ஏற்றவாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்று வருவதாகவும் பிரதீபன் தெரிவித்துள்ளார்.