மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,“நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்றினை அரசியல் செய்யும் வேலைத்திட்டமாகவே இந்த அரசாங்கம் பயன்படுத்துகின்றது.
இவ்வாறான விடயங்களை நாங்கள் முன்வைக்கும் போது சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் எங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து நீங்களே எதாவது செய்யலாம் தானே என்று.
அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வது ஒன்று தான். எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுங்கட்சியுடன் இருந்து கொண்டே இருவரும் ஒன்றும் செய்து கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றார்கள்.
அவ்வாறிருக்கும் போது நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம். இதன்படி எங்களுக்கான பொறுப்பு என்னவென்றால் எவ்விடத்தில தவறு நடக்கின்றது என்கின்ற விடயங்களை எடுத்துச் சொல்லக் கூடியது தான் எங்கள் பொறுப்பாகும்.
எமது மாவட்டத்தில் தற்போதையை கொரோனா தொடர்பான எந்தவிதமான கூட்டங்களுக்கும் எனக்கும் சக கோ.கருணாகரனுக்கும் எவ்வித அழைப்புகளும் விடுப்பதில்லை.
அரசாங்க அதிபரோ, பிரதேச செயலாளர்களோ இதுவரை காலத்தில் கொரோனா தொடர்பான எவ்வித கூட்டங்களுக்கும் தெரியப்படுத்தியதில்லை.
எங்களை அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குக் காரணம் என்னவென்றால் எமது மாவட்டத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நாங்களும் அவ்விடத்தில் எடுத்துக் கூறமுடியும்.
எமது மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுந்தரப்பு பிரதிகள் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களைத் திறப்பு விழாவாகச் சித்தரிப்பதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
ஆனால் அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான சிலருக்குத் தங்குவதற்குக் கூட இடங்கள் இல்லாமல் இருக்கின்றது. துணிச்சலாக ஒரு சிலர் இவற்றை வெளிப்படுத்துகின்றார்கள். இதுபோல் எத்தனை பேர் இருக்கின்றார்களோ தெரியவில்லை.
ஏதோவொரு பழைய கட்டடத்தில் பத்து பதினைந்து கட்டில்களைப் போட்டு ரிபன் வெட்டி திறப்பு விழா செய்யும் கௌரவ வியாழேந்திரன் மற்றும் கௌரவ சந்திரகாந்தன் ஆகியோர் எமது மக்களிடம் இவற்றைத் தான் அபிவிருத்தி என்று வாக்குறுதி அளித்தார்களோ தெரியவில்லை.
நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எங்களது கருத்துகளைச் சொல்வதற்குக் கூட இந்த மாவட்டத்தில் சந்தர்ப்பம் இல்லாத நிலையை அவர்கள் இருவரும் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.
எமது மாவட்டத்தில் அரசாங்க அதிபர் ஒரு அடிமையாக, கைதியாகப் பயன்படுத்தப்படுகின்றார். மாவட்ட அரசாங்க அதிபர் தான் இந்த மாவட்டத்தில் முதல் அரசியல் கைதி.
அவரை நாங்கள் முதலில் விடுவிக்க வேண்டும். அதாவது மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு அரசியல் கைதியாக பிள்ளையான் வியாழேந்திரனிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.