சீனாவும், ரஷ்யாவும் தங்களது நட்புறவு ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதாக முறைப்படி அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பினை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் காணொளி காட்சி வழியாக உறுதிப்படுத்தினர்.
ஒரு காலத்தில் எதிரிகளாக விளங்கிய இந்த இரு முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளும் மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்த நட்புறவு ஒப்பந்தத்தை புதுபித்துள்ளது.
காணொளி காட்சி வழி சந்திப்பின்போது, கடந்த 2001ஆம் ஆண்டில் இரு தரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட நட்புறவு ஒப்பந்தத்தை நினைவு கூர்ந்த தலைவர்கள், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தங்களுடைய நட்புறவு புதிய உச்சத்தை தொட்டதாக பெருமிதப்பட்டனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி விளாடிமிர் புடின், வெளியுறவு கொள்கை விவகாரங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயற்படுவதால்தான் தங்களின் சர்வதேச ஒத்துழைப்பு நிலைத்து இருப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே எதிர்காலத்தில் இராணுவ கூட்டணியை அமைக்கும் வாய்ப்பை ஒதுக்கி விட முடியாது எனவும் புடின் கூறினார்.
சீனா, ரஷ்யா இடையிலான கேந்திர ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்திய ஷி ஜின்பிங், பொது நல விவகாரங்களில் இரு நாடுகளும் சர்வதேச அரங்குகளில் ஒன்றுக்கொன்று தோள் கொடுக்கும் என்று கூறினார்.