மத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்படுள்ள வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 33பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் வெள்ளத்தால் 200,000பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் க்ஹெனான் மாகாணத்தில் உள்ள மெட்ரோ ரயிலுக்குள் நீர் புகுந்ததால், 12பேர் உயிரிழந்ததோடு சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து ஐநூறுக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக ஹெனான் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாகாணத்தின் பல நகரங்களில் வீதிதோறும் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது. நீரின் வேகத்துடன் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இடிபாடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. பல இடங்களில் நடைபாதையில் சென்றவர்கள் மீட்கப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
இதுவரை க்ஹெனான் மாகாணத்தில் 25பேர் இறந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் பன்னிரண்டு நகரங்களாவது வெள்ளத்தின் கடுமையான தாக்கத்தை அனுபவித்துள்ளதாகவும் அந்த மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு அணைகள், நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவைக் கடந்து நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் அணைக்கட்டுகளை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்த வெள்ளத்தை திருப்பி விடும் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தைவானின் கிழக்கே வலுப்பெறும் சூறாவளியால் ஓரளவு உந்தப்பட்ட இந்த வாரம் கடுமையான மழை தொடரும் என்று கணிக்கப்பட்டது. தெற்கு சீனாவின் குவாங்டாங்கில், 13 கட்டுமானத் தொழிலாளர்கள் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதையில் சிக்கியதில் உயிரிழந்தனர்.
மாகாண தலைநகரான ஜங்ஜௌ நகரில் வருடம் முழுவதும் பொழிந்திருக்க வேண்டிய மழை, வெறும் மூன்றே நாட்களில் கொட்டித்தீர்த்துள்ளது.
பருவநிலை மாற்றமும், புவி வெப்பமடைவதும் தற்போதைய மழை பொழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் மேலும் தீவிர மழை பொழியலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.