பாரிய உயிரிழப்புகளை தடுக்க பிரித்தானியா ஆம்புலன்ஸ்கள் மற்றும் கூடுதல் நிதியை வழங்கவுள்ளதாக, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா முதன்முதலில் படையெடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிப்பதன் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு அதிக தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கூடுதலாக 22 புதிய ஆம்புலன்ஸ்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகளால் 20 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன.
பாராமெடிக்கல் கிட்கள் மற்றும் மெடிக்கல் கிராப் பேக்குகள் ஆகியனவும் எதிர்வரும் நாட்களில் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 135க்கும் மேற்பட்ட சுகாதார வசதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளது. இதனால், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் வெகுஜன விபத்து பயிற்சி ஆகியவற்றைக் உக்ரைன் கோரியது.
ரஷ்யா படையெடுத்ததில் இருந்து ஏறக்குறைய ஒன்பது வாரங்களில் 2,072 இறப்புகள் மற்றும் 2,818 காயங்கள் உட்பட சுமார் 4,800 பொதுமக்கள் உயிரிழப்புகளை ஐநா பதிவு செய்துள்ளது. உண்மையான புள்ளிவிபரங்கள் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.