இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
கட்டாக் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 40 ஓட்டங்களையும் இசான் கிசான் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், நோட்ஜே 2 விக்கெட்டுகளையும் ரபாடா, பார்னல், பிரிடோரியஸ் மற்றும் மஹாராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 149 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்ன்ரிச் கிளாசென் 81 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹெய்ன்ரிச் கிளாசென் தெரிவுசெய்யப்பட்டார்.