மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி, 53 ஓட்டங்களால் டக்வத் லுயிஸ் முறைப்படி வெற்றிபெற்றுள்ளது.
முல்தான் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. மழைக் குறுக்கிட்டதால் போட்டி 48 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சதாப் கான் 86 ஓட்டங்களையும் இமாம் உல் ஹக் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், நிக்கோலஸ் பூரான் 4 விக்கெட்டுகளையும் கீமோ போல் 2 விக்கெட்டுகளையும் ஜெய்டன் சீல்ஸ், ஹெய்டன் வோல்ஷ் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 270 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 37.2 ஓவர்கள் நிறைவில் 216 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், பாகிஸ்தான் அணி, 53 ஓட்டங்களால் டக்வத் லுயிஸ் முறைப்படி வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அகீல் ஹொசைன் 60 ஓட்டங்களையும் கார்டி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சதாப்கான் 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தஹானி மற்றும் வசிம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக சதாப் கானும், தொடரின் நாயகனாக இமாம் உல் ஹக்கும் தெரிவுசெய்யப்பட்டனர்.