நெதர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 232 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
ஆம்ஸ்டெல்வீன் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 498 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதுவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அணியொன்று பதிவு செய்த அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 125 ஓட்டங்களையும் சோல்ட் 122 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நெதர்லாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சீலார் 2 விக்கெட்டுகளையும் வென் பீக் மற்றும் ஸ்னெடர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 499 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணி, 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 232 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்கொட் எட்வட்ஸ் ஆட்டமிழக்கது 72 ஓட்டங்களையும் மெக்ஸ் ஓடோவ்ட் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொயின் அலி 3 விக்கெட்டுகளையும் டேவிட் வில்லி, ரீஸ் டொப்லே மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் டாவிட் மாலன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.