பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.
கயானா மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அபீப் ஹொசைன் 50 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஹெய்டன் வோல்ஷ் 2 விக்கெட்டுகளையும், ஒடியன் ஸ்மித் மற்றும் ரொமாறியோ செப்பர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிக்கோலஸ் பூரான் ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களையும் கெய்ல் மேயர்ஸ் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நசும் அஹமட் 2 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன், சகிப் அல் ஹசன் மற்றும் அபீப் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் நிக்கலோஸ் பூரான் தெரிவுசெய்யப்பட்டார்.