ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக சர்வதேச செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்தினூடாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளதுடன், அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நேரடியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைடுத்து, ஜனாதிபதியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறும் நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளிப்பதாக ஜனாதிபதி அறிவித்தார்.
73 வயதான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கைப்பற்றுவதற்கு சற்று முன்னர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
கடற்படைக் கப்பலில் ஏறி திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பின்னர் நேற்று மாலை டுபாய் நோக்கிப் புறப்படுவதற்காக விமானம் மூலம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்குத் திரும்பியிருந்தார்.
எவ்வாறாயினும் விமான நிலையம் மற்றும் விமானப் பயணிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நாட்டைவிட்டு விமான நிலையம் வழியாக வெளியேறும் முயற்சி தோல்வியடைந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கைது செய்யப்பட்ட பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பதவி விலகுவதற்கு முன்னர், வெளிநாடு செல்ல விரும்புவதாக நம்பப்படுவதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஜனாதிபதியின் கடவுச்சீட்டை முத்திரையிடுவதற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் பயணிகள் முனையத்திற்கு செல்ல குடிவரவு அதிகாரிகள் மறுத்துள்ளதுடன், பாதுகாப்பு பிரச்சினை காரணமாக விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தை பயன்படுத்துவதை ஜனாதிபதி தவிர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லக்கூடிய நான்கு விமானங்களும் சேவையில் ஈடுபடாததால், ஜனாதிபதியும் அவரது மனைவியும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விமானப்படை தளத்தில் இரவைக் கழித்ததாக அந்தச்செய்தி சேவை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்த ஜனாதிபதியின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ஷவும் விமான நிலைய ஊழியர்களுடன் இதேபோன்ற மோதலை அடுத்து இன்ற அதிகாலை டுபாய்க்குச் சென்ற எமிரேட்ஸ் விமானத்தை தவறவிட்டார்.
இலங்கைப் பிரஜாவுரிமைக்கு மேலதிகமாக அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ள பசில் ராஜபக்ஷ, பின்னர் வணிகப் பயணிகளுக்காக விசேட கட்டணச் சேவையைப் பயன்படுத்த முயன்றார். ஆனால் விமான நிலைய மற்றும் குடிவரவு ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தச் சேவைகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தனர்.
அத்தோடு, பசில் விமானத்தில் ஏறுவதற்கு பல பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என விமான நிலைய அதிகாரி ஒருவர் சர்வதேச செய்திச் சேவையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது ஒரு பதற்றமான சூழ்நிலை என்றும் எனவே அவர் விரைவாக விமான நிலையத்தை விட்டு வெளியேறினார் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி மேலும் கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ புதிய அமெரிக்க கடவுச்சீட்டை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதியையும் அவரது பரிவாரங்களையும் கடற்படை ரோந்துக் கப்பலில் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வது குறித்து ஜனாதிபதியின் நெருங்கிய இராணுவ உதவியாளர்கள் தற்போது கலந்துரையாடி வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.