இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஐந்தாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
லாகூரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஸ்வான் 63 ஓட்டங்களையும் இப்தீகார் அஹமட் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் டேவிட் வில்லி மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியால், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொயின் அலி ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹரீஸ் ரவூப் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் நவாஸ், மொஹமட் வாசிம், சதாப் கான், இப்தீகார் அஹமட் மற்றும் ஆமீர் ஜமால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 46 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்ரிகள் அடங்களாக 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமட் ரிஸ்வான் தெரிவுசெய்யப்பட்டார்.