முத்தரப்பு ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிடொன் தாஸ் 69 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நஷிம் ஷா மற்றும் மொஹமட் வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நவாஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ரிஸ்வான் 69 ஓட்டங்களையும் பாபர் அசாம் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹசன் மொஹமுத் 2 விக்கெட்டுகளையும் சௌமியா சர்கார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 56 பந்துகளில் 4 பவுண்ரிகள் அடங்களாக 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமட் ரிஸ்வான் தெரிவுசெய்யப்பட்டார்.
நாளை கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியும் நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.