சீனாவின் அமைதித் திட்டத்துக்கு பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர்களான சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், பெலாரஸ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் நேற்று (வியாழக்கிழமை) பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, சீனாவும் பெலாரஸும் மோதல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, உக்ரைனில் விரைவில் அமைதியை நிறுவுவதில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தின.
மேலும், அனைத்து பனிப்போர் மனநிலையையும் கைவிடுமாறு சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இதன்போது அழைப்பு விடுத்தார்.
உலகப் பொருளாதாரத்தை அரசியல்மயமாக்குவதை நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும், போர் நிறுத்தம் மற்றும் அமைதியான தீர்வுக்கு உதவும் விடயங்களைச் செய்ய வேண்டும் என்றும் ஸி ஜின்பிங் கூறினார்.
சீனாவின் அமைதித் திட்டத்தை பாராட்டிய பெலாரஸ் ஜனாதிபதி, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சீனா திட்டத்தை தனது நாடு முழுமையாக ஆதரிக்கிறது என கூறினார்.
லுகாஷென்கோவின் சீனாவுக்கான மூன்று நாட்கள் விஜயம், உக்ரைன் போருக்குப் பல மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பரில், பெலாரஸுடனான தனது உறவின் நிலையை சீனா மேம்படுத்திய பின்னர் வந்துள்ளது.
தேசிய இறையாண்மைக்கு மதிப்பளித்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை சீனா கடந்த வாரம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.