புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனிமேல் நியூயோர்க்கில் இடமில்லை என அந்நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “நியூயோர்க் நகரம் நிரம்பிவிட்டது. புலம்பெயர்ந்த மக்களுக்கு இனி இங்கு இடமில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 90,000 பேர் நியூயோர்க்கிற்கு வந்துள்ளனர்.
இனியும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடமில்லை. இதனை நான் முன்னரே பதிவு செய்திருந்தேன். ஆனால்,இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நேரடி சாட்சியாக பார்க்கிறோம். நியூயோர்க்கில் வீட்டுகளின் விலை உயர்ந்துவிட்டது.
இங்கு உணவு, போக்குவரத்து மற்றும் பிற தேவைகளின் விலையானது அமெரிக்காவில் பிற மாகாணங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இது இனியும் தொடர முடியாது, தேசியப் பிரச்சினையின் மொத்த எடையை நியூயோர்க் நகரம் மட்டும் சுமக்கிறது என்பது தவறு” இவ்வாறு மேயர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு தொடக்கத்திலே, நியூயோர்க் நகரில் புலம்பெயர்பவர்களால் உண்டாகும் நெருக்கடிகளை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், நியூயோர்க் நகர மேயருமான எரிக் ஆடம்ஸ் விமர்சித்திருக்கிறார்.
இவ்விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நியூயோர்க் மேயர் மட்டுமல்ல, அமெரிக்காவின் சிகாகோ, வாஷிங்டன் டிசி போன்ற நகர மேயர்களும் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.