இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இன, மத வேறுபாடின்றி அனைவரும் பாரிய சேதங்களை சந்திக்க நேரிட்டது என்று தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் முன்வைத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் பொறிமுறைகளை ஆராய்ந்து இலங்கைக்குப் பொருத்தமான பொறிமுறையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் நாடு மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே சமூகத்தை தெளிவுபடுத்தி இதனைச் செயற்படுத்துவதற்கான ஆதரவைப் பெற வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.