முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பொது வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் சுகாதாரப் பணி உதவியாளர்கள் உள்ளிட்டவர்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் முல்லைத்தீவு, பொது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களும் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வைத்தியசேவை ஸ்தம்பிதமடைந்ததோடு, வைத்தியசாலைக்கு வருகைத் தந்த நோயாளர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டமானது நாளை காலை 8 மணி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.