இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 200,000க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்ததாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 100,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால தேசிய பூங்காவை பார்வையிட வந்துள்ளனர்.
மேலும், வஸ்கமுவ, குமண, வில்பத்துவ, புந்தல, உடவலவ, மின்னேரியா, கௌதுல்ல போன்ற தேசிய பூங்காக்களுக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் பெறக்கூடிய வருமானம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வருடத்தில் 686,321 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.