அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை கோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி பின் இடைநீக்கம் செய்யப்பட்ட சங்கர், சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். மேலும் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இதுமட்டுமல்லாமல் பல்வேறு இணையதளங்களுக்கும் யூடியூப் சனல்களுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். அப்படி சனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியே தற்போது அவருக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல யூடியூப் சனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் பொலிசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனால் தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர்.
காவல்துறை வாகனத்தில் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்றபோது தாராபுரம் பகுதியில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தின் முன் பகுதி லேசாக சேதமடைந்த நிலையில் சவுக்கு சங்கர் மற்றும் பொசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கோவை செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி அளிக்கப்பட்டு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி சிறையில் அடைக்க பொலிசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைவாக 293 (பி),509 மற்றும் 353 ipc r/w section 4, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் section 67 இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டம் 2000 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முக்கியமாக தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் பொலிசார் தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.