2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (புதன்கிழமை) யுடன் நிறைவுபெறவுள்ளது.
அதன்படி கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமான சாதாரண தரப் பரீட்சைகள் இன்று 15 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
இப்பரீட்சைக்கு 4 இலட்சத்து 59 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3,527 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களை உயர்தரத்திற்காக அருகிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டாலும், குறிப்பிட்ட பாடத்திட்டம் உரிய பாடசாலையில் கற்பிக்கப்படாவிடின், அப்பாடத்திட்டம் கற்பிக்கப்படும் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.