கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மோதியதில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை லபுகம நீர்த்தேக்கத்தில் இருந்து கொழும்புக்கு நீரை விநியோகம் செய்யும் குழாயில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மோதியதில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
நீர் குழாயில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் பாரியளவு நீர் வெளியேறி வருவதுடன், குறித்த இடத்தில் உள்ள மின்கம்பமும் உடைந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிக்கிய கார் சாரதி உட்பட இருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் கொழும்புக்கான நீர் விநியோகம் சிறிது நேரம் தாமதமாகலாம் என நீர் வழங்கல் சபையின் மஹரகம வலய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.