சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் நடந்த ஊழல் மோசடிகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியதையடுத்து அவரை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக நேற்று முதல் குறித்த வைத்தியசாலையில் பெரும் பதற்றமானதொரு சூழல் நிலவி வந்தது.
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக பொது மக்கள் ஒன்றிணைந்து நேற்றிரவு போராட்டம் நடத்திய நிலையில், இன்றும் அவர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக ஏ9 வீதியில் இன்று பாரிய பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டிருந்தது.
குறித்த வீதியில் ஒன்றுக்கூடிய மக்கள், வைத்தியர் அர்ச்சுனனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதோடு, அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறக்கூடாது என்றும் கோஷமெழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனால், குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று மதியம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியர் அர்ச்சுனா வைத்தியசாலையை விட்டு வெளியேறியிருந்தார். விசேட பேச்சுவார்த்தை ஒன்றுக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
மேலும், இவருக்கு மக்கள் எதிர்ப்பையும் மீறி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.