ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்துள்ளதாகவும், மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் பிரதி தபால் மா அதிபர் ரஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகளை எதிர்வரும் 14 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இருப்பின் தங்களுக்கு கடிதங்கள் விநியோகிக்கும் அலுவலகத்தில் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தி உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கடந்த 4,5,6 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது.
குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாமல் போன அரச ஊழியர்கள் இன்றும் நாளையும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் குறித்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தாதவர்கள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியன்று வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.