இன்று (27) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, அங்கு 253 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் 253 மி.மீ. மழை வீழ்ச்சும், அச்சுவேலி பகுதியில் 245.3 மி.மீ மழை வீழ்ச்சும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 130 கிலோ மீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 05.30 மணியளவில் நிலை கொண்டிருந்தது.
அது அடுத்த 12 மணி நேரத்தில் தீவின் கிழக்கு கடற்கரையை அண்மித்து நகர்ந்து சூறாவளியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை, பலத்த காற்று வீசக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.